×

திருச்சி 9 சட்டமன்ற தொகுதிகளில் 22.46 லட்சம் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி தீவிரம் 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றினை காட்டி வாக்களிக்கலாம்

திருச்சி, ஏப்.17:   திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 2,531 வாக்குச்சாவடி மையங்களில் வாக்களிக்க வசதியாக 22,46,179 வாக்காளர்களுக்கான வாக்காளர் புகைப்படச்சீட்டு (போட்டோ ஓட்டர் சிலிப்)  கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர் மூலம் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.  தேர்தல் ஆணைய உத்தரவுப்படி வாக்காளர் புகைப்படச் சீட்டு வழிகாட்டுதலுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். வாக்குச் சாவடிகளில் அடையாளச் சான்றாக பயன்படுத்த இயலாது. ஆகையால் இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றினை வாக்குச்சாவடிக்கு எடுத்து வந்து வாக்களிக்கலாம். இயன்றவரை வாக்காளர் அடையாள அட்டையினை கொண்டு வந்து வாக்களிக்க வேண்டும்.

 வாக்களிக்கச் செல்வோர் கொண்டு செல்ல வேண்டிய ஆவணங்களின் பட்டியல்: கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்), ஓட்டுநர் உரிமம், பணியாளர் அடையாள அட்டை (மத்திய, மாநில அரசுகள், அரசு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்கள்), கணக்கு புத்தகங்கள் (வங்கி, அஞ்சலகங்களால் புகைப்படத்துடன் வழங்கப்பட்டவை), வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை (பான் கார்டு), ஸ்மார்டு கார்டு (தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்டது), தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் பணி அட்டை, மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை மத்திய அரசின் தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டது, ஓய்வூதிய ஆவணம் (புகைப்படத்துடன் கூடியது). அலுவலக அடையாள அட்டை (எம்பி, எம்எல்ஏக்களுக்கு வழங்கப்பட்டது). ஆதார் அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை எடுத்துச் சென்று வாக்களிக்கலாம். நாளை நடக்கும் மக்களவை பொதுத் தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் தங்களது வாக்கினை நேர்மையான முறையில் கண்ணியத்துடன் விடுதலின்றி 100 சதவீதம் பதிவு செய்ய வேண்டும் என திருச்சி கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

Tags : Booth Chilip ,voters ,
× RELATED வாக்காளர்களை பிரிப்பதற்கு பிரதமர் முயற்சி: சரத்பவார் விமர்சனம்